கோலாலம்பூர், செப்.30 — மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மலேசிய குடிநுழைவுத் துறையில் தற்காலிக பணி அனுமதி (PLKS) விண்ணப்பங்களில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக, 55 வயது தொழிலதிபர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு குற்றச்சாட்டப்பட்டன.
வனெசா சார்மைன் என்ற அந்தப் பெண், நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், அவற்றை ஒப்புக்கொள்ளவில்லை.
2023ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியும் ஜூன் 12ஆம் தேதியும் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை கிளையில் இந்தக் குற்றங்கள் நிகழ்ந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றவியல் சட்டத்தின் 471ஆவது பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே சட்டத்தின் 465ஆவது பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படக்கூடிய இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இரு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து RM20,000 ஜாமீனை ஒரு உத்தரவாத நபருடன் நீதிமன்றம் அனுமதித்தது.
மேலும், இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக அக்டோபர் 29ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.







