காஜாங், ஆகஸ்ட் 12 — மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக, மியான்மரைச் சேர்ந்த தம்பதியர் RM6,000 செலுத்தியுள்ளது சோதனை நடவடிக்கையில் தெரிய வந்துள்ளது.
இரண்டு பிள்ளைகளுடன் நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியதாக சந்தேகிக்கப்படும் அந்தத் தம்பதியர், குடிநுழைவுத் துறை மற்றும் தேசியப் பதிவுத் துறை இணைந்து மேற்கொண்ட Op Sasar நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
தங்களது குடும்பத்தினரை மியான்மரில் இருந்து வெளியேற்றி, பின்னர் கடல் வழியாக மலேசியாவுக்குக் கொண்டு வருவதற்காக RM6,000 தொகை செலுத்தப்பட்டதாகக் கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்தார்.
தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் படகு வழிகாட்டியாகச் செயல்பட்டு, தங்களின் குடும்பத்தை மியான்மரைச் சேர்ந்த மேலும் சிலருடன் மலேசியாவில் உள்ள லங்காவி தீவிற்கு அழைத்து வந்ததாக அவர் கூறினார்.
அந்தக் குடும்பத்தின் பயணம் ஒரே நேரத்தில் நடைபெறவில்லை என்றும், முதலில் தனது கணவர் 14 வயதுடைய மூத்த மகனுடன் மலேசியாவுக்குள் வந்ததாகவும், பின்னர் தானும் ஏழு வயதுடைய மகளும் மலேசியாவுக்கு வந்ததாகவும் அப்பெண் கூறினார்.
கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் மூலமே தாங்கள் மலேசியாவுக்குள் நுழைந்ததாகவும், அதன் பின்னர் குடும்பமாக இங்கு வசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வரும் அவர்கள், தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையமான UNHCR மூலம் தங்களது நிலையைப் பதிவு செய்து அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த Op Sasar நடவடிக்கையின்போது மொத்தம் 330 வெளிநாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 248 பேர் மேல் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







