சுகாய், நவ.16: திரங்கானு,கெமாமான் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆறு தொடர் அதிரடிச் சோதனைகளில், 340,607 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வகையான போதைப்பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், கணவன், மனைவி உட்பட 10 பேரையும் கைது செய்துள்ளனர்.
கெமாமான் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரிண்டெண்டன் முகமட் ராஸி ரோஸ்லி இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கெமாமான் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆறு சோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்தச் சோதனைகளில் மிக அதிகமான போதைப்பொருட்கள் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி இங்குள்ள கம்போங் ஜெயா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.
அப்போது 302,560 ரிங்கிட் மதிப்பிலான 4.03 கிலோகிராம் யாபா (Yaba) போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், 28 மற்றும் 29 வயதுடைய கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அந்தச் சோதனையின்போது சுமார் 39,000 ரிங்கிட் மதிப்புள்ள ஒரு பெரோடுவா மைவி கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக முகமட் ராஸி தெரிவித்தார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மற்ற சோதனைகளில் 25 முதல் 51 வயதுக்குட்பட்ட மேலும் எட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர், பொருட்களை விநியோகிக்கும் சேவையைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைப் பெற்றுக்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆறு சோதனைகளிலும் கைது செய்யப்பட்ட 10 பேரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில், அனைவரும் மெத்தாம்பெட்டமின் (Methamphetamine) வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.







