கோலாலம்பூர், அக்.30 – பிள்ளைகள் போதைப்பொருள் துஷ்பிரயோகம் உள்ளிட்ட தவறான பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொள்வதைத் தடுக்க பெற்றோர் தங்களது பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் நட்புவட்டம் ஆகியவற்றைக் கூடுதல் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டும்.
இதனை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
பிள்ளைகளின் எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தி, அவர்களுக்கு முறையான கல்வியையும் ஒழுக்கத்தையும் வழங்கும் பொறுப்பை முழுமையாக அரசாங்கத்திடமோ அல்லது பள்ளிகளிடமோ ஒப்படைத்துவிட முடியாது.
இதில் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் அக்கறையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, பிள்ளைகள் அன்றாடம் என்ன செய்கிறார்கள், அவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது, வீட்டுப்பாடங்களை முறையாகச் செய்கிறார்களா, எத்தனை மணிக்குத் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் போன்ற விவரங்களைப் பெற்றோர் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இன்று கோலாலம்பூர், பண்டார் தாசிக் செலாத்தான் பகுதியில் உள்ள அல்-முகார்ரபின் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், மனநலப் பிரச்சனைகள் மற்றும் ஆட்டிசம் தொடர்பான விவகாரங்களும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
இத்தகைய சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்தின் முயற்சிகள் மட்டுமின்றி, பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இளைய தலைமுறையினர் தங்களது இறைவழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டும், கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
அதேபோன்று, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை மதித்து நடப்பதன் அவசியத்தையும் இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதாக அவர் கூறினார்.







