பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சோகர்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சபா, கோத்தா கினாபாலுவிலிருந்து விமானம் வழி ஜகார்த்தா சென்றடைந்த அந்த மூன்று பெண்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததாக இந்தோனேசிய சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
அதனால், அவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உடமைகள், காலணிகள் மற்றும் மருந்துப் பொட்டலங்கள், மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கேயேன், MDMA மாத்திரைகள், கெட்டமைன் கொண்ட புகையிலை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, மூன்று மலேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதைப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் சபாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களின் வயது 30 முதல் 39 வயதுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்களில் இருவருக்கு ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளதாக ஹுசைன் கூறினார்.
அவர்கள் விடுமுறைக்காக இந்தோனேசியா சென்றிருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு குறைவாக இருந்ததால் அவை தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறை நம்புவதாக அவர் தெரிவித்தார்.







