மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டவரை அழைத்து வர உதவிய அரசு ஊழியர் கைது

20 நவம்பர் 2026, 4:07 AM
மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டவரை அழைத்து வர உதவிய அரசு ஊழியர் கைது

ஷா ஆலாம், நவ.20: முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டுப் பெண்ணை மலேசியாவுக்குள் அழைத்து வருவதற்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாவது முனையமான KLIA2-இல் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய ஆண் அரசு ஊழியர் என்றும், அவர் விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் அமைந்துள்ள குடிநுழைவுப் பரிசோதனை முகப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் KLIA மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் எம். ரவி தெரிவித்தார்.

38 வயதுடைய வெளிநாட்டுப் பெண் ஒருவரைச் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இன்றி நாட்டுக்குள் அழைத்து வர அவர் முயன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் குடிநுழைவுப் பரிசோதனை முகப்புகளில் பணியமர்த்தப்பட்டிருந்த மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS) அதிகாரிகள் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக ரவி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை சுமார் 1.18 மணியளவில் காவல்துறைக்குப் புகார் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர், 2007-ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் குடியேறிகள் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் (ATIPSOM) பிரிவு 26B(d)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், முறையான பயண ஆவணங்கள் இன்றி மலேசியாவுக்குள் நுழைந்ததாகச் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டுப் பெண், 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் (சட்டம் 155) பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரவி தெரிவித்தார்.

உத்துசான் மலேசியா வெளியிட்டுள்ள செய்தியின்படி, இன்று தொடர்புகொண்டு கேட்டபோது KLIA மாவட்டக் காவல்துறைத் தலைவர் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.