ஷா ஆலாம், நவ.20 – சிலாங்கூரில் இளம் விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஆரம்பக் கட்டத்திலேயே அடையாளம் கண்டு, விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் நோக்கில் சட்டமன்றத் தொகுதி அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போது மாவட்ட அளவில் நடைபெற்று வரும் சிலாங்கூர் விளையாட்டுப் போட்டிகளை (Sukan Selangor) விரிவுபடுத்தும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

இதற்கான திட்டத்தைச் சிலாங்கூர் மாநில விளையாட்டுக் கவுன்சில் (MSNS) உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் அதிகமான இளைஞர்கள் விளையாட்டுகளில் பங்கேற்கவும், திறமையான வீரர்கள் உயர்நிலைப் பயிற்சித் திட்டங்களுக்குத் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், பள்ளிகள் விளையாட்டுக் கவுன்சிலுடன் இணைந்து பள்ளி நிலையிலேயே திறமையான வீரர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கல்வி அமைச்சின் பள்ளி விளையாட்டுத் திட்டத்தில் இடம்பெறாத விளையாட்டுப் பிரிவுகளுக்கும் இந்த முயற்சியின் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், 2028-ஆம் ஆண்டு கிளந்தானில் நடைபெறவுள்ள பாரா சுக்மா போட்டிக்கான முன் ஏற்பாடுகளை முன்னிட்டு, பாரா விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் பயிற்சிகளை ஒருங்கிணைக்கவும் MSNS தனிப்பிரிவை அமைத்துள்ளதாக நஜ்வான் தெரிவித்தார்.







