ஷா ஆலாம், அக்.9 – சிலாங்கூர் மாநிலத்தில் மோசமடைந்து வரும் புகைமூட்டதால் நாளை நடைபெறவிருந்த 2026ஆம் ஆண்டுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவிலான தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
சிலாங்கூரில் பல பகுதிகளில் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால், தற்போதைய சூழலில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அனைத்து அமலாக்க அமைப்புகள், ஊராட்சி மன்றங்கள், மாவட்ட இளைஞர் மற்றும் விளையாட்டு அலுவலகங்கள், அத்துடன் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இணைந்துள்ள அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒத்திவைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மீண்டும் நடைபெறும் தேதி மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்த அண்மைய தகவல்களைப் பெறுவதற்குப், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.







