ஷா ஆலாம், நவம்பர் 14: சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விளையாட்டுத் துறைக்கெனத் தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படாத போதிலும், இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் திட்டங்கள் அடுத்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, 2028-ஆம் ஆண்டு கிளந்தானில் நடைபெறவுள்ள மலேசிய விளையாட்டுப் போட்டியான சுக்மாவை (SUKMA) முன்னிட்டு, புதிய விளையாட்டுத் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களை தயார்ப்படுத்துவதில் மாநில அரசு கவனம் செலுத்தும் என அவர் கூறினார்.
இதன் ஒரு பகுதியாக, சிலாங்கூர் மாநில விளையாட்டுப் போட்டியான சுக்செஸ் (SUKSES) தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதில் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மாவட்ட அளவில் உள்ள இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதுடன், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி 2027-ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து மீடியா சிலாங்கூரிடம் அவர் இவ்வாறு கூறினார்.
இந்த ஆண்டு சுக்மா போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு முழுவதும் விளையாட்டு வீரர்களின் திறன் மேம்பாடு மற்றும் புதிய திறமையாளர்களை அடையாளம் காண்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் நஜ்வான் குறிப்பிட்டார்.







