ஷா ஆலாம், செப்.26 – 22ஆவது சுக்மா மற்றும் பாரா சுக்மாவில் சிலாங்கூரைப் பிரதிநிதித்துப் பங்கேற்ற வீரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நவம்பர் மாதம் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
இதற்காக மொத்தம் கிட்டத்தட்ட RM7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
வீரர்களுக்கு மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட விளையாட்டுச் சங்கங்கள், அதிகாரிகள் மற்றும் மாநில விளையாட்டுக் குழுவின் நிர்வாகத்தினருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் சிறப்பான சாதனைகளைப் பதிவு செய்த அனைத்து வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இதனை சிலாங்கூர் விளையாட்டு விருது வழங்கும் நிகழ்வுடன் இணைந்து நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னதாக, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, மாநிலம் ஒட்டுமொத்த சுக்மா வெற்றியாளர் பட்டத்தை வென்றால், தங்கப் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரிவைப் பொறுத்து RM2,000 முதல் RM5,000 வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் மூன்று பேர் கொண்ட குழுக்களில் இடம்பெற்ற வீரர்களுக்கு தலா RM15,000 வழங்கப்படும்.
10 பேருக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களில் இடம்பெறும் வீரர்களுக்கு தலா RM10,000 வழங்கப்படும் நிலையில், 10 பேருக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களில் இடம்பெறும் வீரர்களுக்கு தலா RM7,000 வழங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு நடைபெற்ற சுக்மாவில் சிலாங்கூர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. மாநிலம் மொத்தம் 245 பதக்கங்களை வென்றதுடன், அதில் 101 தங்கப் பதக்கங்களும் அடங்கும்.
அதேவேளையில், பாரா சுக்மாவில் சிலாங்கூர் அணியும் சிறப்பான சாதனையைப் பதிவு செய்து, மொத்தம் 200 பதக்கங்களில் 93 தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.







