சூப்பர் எல் நினோ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிலாங்கூரின் நீர் விநியோகம் சீராக உள்ளது

20 நவம்பர் 2026, 7:50 AM
சூப்பர் எல் நினோ அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சிலாங்கூரின் நீர் விநியோகம் சீராக உள்ளது

ஷா ஆலாம், நவ.20 – சூப்பர் எல் நினோ பருவநிலை மாற்றத்தால் சிலாங்கூரில் நீர் விநியோகத்தில் இதுவரை குறிப்பிடத்தக்க பாதிப்புகள் ஏற்படவில்லை என்று மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

2026-ஆம் ஆண்டில் சிலாங்கூரின் சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தித் திறன் நாளொன்றுக்கு 6,500 மில்லியன் லிட்டராக (MLD) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், நீர்த் தேவை 5,370 மில்லியன் லிட்டராக இருப்பதால், நாளொன்றுக்கு 1,130 மில்லியன் லிட்டர் உபரி நீர் உற்பத்தித் திறனும், 17.4 விழுக்காடு நீர் இருப்பு விகிதமும் காணப்படுவதாக அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், சூப்பர் எல் நினோ மற்றும் புகைமூட்டத்தால் மாநிலத்தின் நீர் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பாக கோலா குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது இஷாம் ஹாஷிம் இத்தகவல்களை வெளியிட்டார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான மூலநீர் எடுப்பு 4.11 விழுக்காடு குறைந்துள்ளதுடன், நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கான நீர் எடுப்பும் 2.38 விழுக்காடு சரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS), நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS), ஆயர் சிலாங்கூர் ஆகியவை அணைகளின் நீர்மட்டம் மற்றும் மூலநீர் இருப்பைக் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. நவம்பர் மாத நிலவரப்படி அனைத்து அணைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், அண்மைய எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் நீர் விநியோகத்தில் பாதிப்பு அல்லது நீர் மாசுபாடு ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என்றும், நீரின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் இஷாம் கூறினார்.

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ள பெஸ்தாரி ஜெயாவில் நீர் இறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், கூடுதல் மூலநீர் சேமிப்பு வசதிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல், மாற்று நீர் ஆதாரங்களாக 20 குளங்கள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனுடன், சிலாங்கூர் Off-River Storage திட்டத்தின் கீழ் மேலும் 140 குளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 160 மில்லியன் கனமீட்டர் நீரைச் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் ஆய்வுகளும் நாளொன்றுக்கு 2,300 மில்லியன் லிட்டர் நீரைப் பெறுவதற்கான சாத்தியக்கூறைக் காட்டியுள்ளன.

தற்போதைக்கு மேக விதைப்பு நடவடிக்கை அவசியமில்லை என்றும், அணைகளின் நீர்மட்டம் சுமார் 50 விழுக்காடாகக் குறைந்தால் அதனைப் பரிசீலிக்க முடியும் என்றும் இஷாம் தெரிவித்தார்.

இதற்கிடையில், எதிர்வரும் ஆண்டுகளில் சிலாங்கூரின் நீர் இருப்பு விகிதம் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், லங்காட் 2 நீர் உள்கட்டமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மாநிலத்தின் எதிர்கால நீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.