ஷா ஆலாம், நவ.20: கோலா சிலாங்கூர், கம்போங் குவாந்தானில் அமைந்துள்ள புகழ்பெற்ற மின்மினிப் பூச்சிகள் பூங்கா சீரற்ற வானிலை காரணமாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் (MPKS) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தத் தற்காலிக மூடல் 2026-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மறு திறப்பு தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்தச் சுற்றுலாத் தலத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், தற்காலிக மூடல் நடவடிக்கை குறித்து முன்கூட்டியே கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தத் தற்காலிக மூடலால் பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கு கோலா சிலாங்கூர் ஊராட்சி மன்றம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டதுடன், இக்காலப்பகுதியில் பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவித்தது.
மின்மினிப் பூச்சிகளைக் காண்பதற்காகப் பிரபலமாக விளங்கும் கம்போங் குவாந்தான் சுற்றுலாத் தலம், கோலா சிலாங்கூரின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.








