உலு சிலாங்கூர், நவ. 12 – கோலா குபு பாருவில் உள்ள சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தளத்திற்கு அருகே சுங்கை லுயிட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஆறாவது நபரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று காலை சுமார் 10.15 மணியளவில் சுங்கை சிலாங்கூர் அணைக்கு அருகே அடையாளம் காணப்படாத அந்நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அஷ்ருல் ரிஸால் அஸ்பார் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சடலம் பின்னர் அடையாளம் காணும் நடவடிக்கைகளுக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இதற்கிடையில், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் தொடங்கிய தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக் குழுவினர் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, லத்தா ஜெபுஸ் முதல் சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தளம் வரையிலான ஆற்றுப் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கில் மொத்தம் எட்டு பேர் ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் முதல் நபரின் சடலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டதுடன், அதே நாளில் மேலும் நான்கு பேரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுவரை மீட்கப்பட்ட ஆறு பேரில் ஒருவர் மலேசியர் என்றும், மற்ற ஐவர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஏழு பேர் லத்தா ஜெபுஸ் பகுதியிலும், மற்றொருவர் சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தளத்திற்கு அருகிலும் நீரோட்டத்தில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன எஞ்சிய இருவரையும் கண்டுபிடிக்கும் நோக்கில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.







