ஷா ஆலாம், நவ.20 – சிலாங்கூரில் புதிதாகக் கோழிப் பண்ணைகளை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களிடமிருந்து (PBT) திட்டமிடல் அனுமதியை (Kebenaran Merancang - KM) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய கோழிப் பண்ணைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், பண்ணை அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் பொருத்தம், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகள் ஆய்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை மாநில விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் விளக்கினார்.
மேலும், தற்போது அனுமதிக்கப்படாத இடங்களீல் செயல்படும் கோழிப் பண்ணைகளுக்கு, அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அதேபோல், அனுமதிக்கப்பட்ட இடங்களில் செயல்படும் திறந்தவெளி கோழிப் பண்ணைகளும் மூடப்பட்ட கொட்டகை முறைக்கு (Closed House System) மாற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் துர்நாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்து, அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியும் என்றார் அவர்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கோழிப் பண்ணைகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் பொதுமக்களுக்கான இடையூறுகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், கோழிப் பண்ணை நடவடிக்கைகளை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில், 2007-ஆம் ஆண்டு சிலாங்கூர் மாநில கோழிப் பண்ணைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களில் பண்ணைகளுக்கான பாதுகாப்பு இடைவெளி, கோழிக் கழிவுகளை முறையாக நிர்வகித்தல், கழிவுகளை வெளியேற்றுவதற்கு முன் சுத்திகரித்தல் மற்றும் கோழி வளர்ப்புக்கான சிறந்த நடைமுறைத் தரநிலைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இடம்பெறவுள்ளன.
தற்போதைய சட்டத்தின்படி, கோழிப் பண்ணைகள் அருகிலுள்ள வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து குறைந்தபட்சம் 200 மீட்டர் நேர்கோட்டு இடைவெளியில் அமைந்திருக்க வேண்டும்.
இருப்பினும், மூடப்பட்ட கொட்டகை முறையில் செயல்படும் பண்ணைகளுக்கு இந்த இடைவெளி நிபந்தனை பொருந்தாது என இஷாம் ஹாஷிம் தெளிவுபடுத்தினார்.







