பெட்ரோலில் நீர் கலந்ததாகப் புகார்: பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் KPDN சிலாங்கூர்

23 அக்டோபர் 2026, 5:00 AM
பெட்ரோலில் நீர் கலந்ததாகப் புகார்: பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கும் KPDN சிலாங்கூர்

ஷா ஆலாம், அக்.23 — வாகனங்களின் இயந்திரங்களில் கோளாறு ஏற்படுவதற்குப் பெட்ரோலில் நீர் கலந்திருப்பதே காரணம் என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில், ரோன்95 பெட்ரோல் மாதிரிகளை சிலாங்கூர் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் வாகனமோட்டிகள் வெளியிட்ட புகார்களைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 22ஆம் தேதி பூச்சோங் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் திடீர் சோதனைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டதாகச் சிலாங்கூர் KPDN தெரிவித்தது.

பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களிலிருந்து ரோன்95 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர், அவை ஆய்வகப் பரிசோதனைக்காக மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டதாக அமைச்சு தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பெட்ரோலில் நீர் கலந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் மாசுப் பொருட்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த ஆய்வகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது.

இந்த விவகாரத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ள சிலாங்கூர் KPDN, சட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்கிடையில், பெட்ரோல் நிரப்பிய பின்னர் தங்களது வாகனங்களில் இயந்திரக் கோளாறுகள் அல்லது வேறு பிரச்சனைகளை எதிர்கொண்ட வாகனமோட்டிகள், அதற்கான ஆதாரங்கள் மற்றும் முழுமையான தகவல்களுடன் KPDN-க்கு அதிகாரப்பூர்வப் புகார்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய புகார்கள் விசாரணைக்கு உதவியாக அமையும்.

இதற்கு முன்னதாக, அக்டோபர் 16ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சிலாங்கூர் மாநிலத்தில் ஏழு பெட்ரோல் நிலையங்களை உள்ளடக்கிய 10 அதிகாரப்பூர்வப் புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சிலாங்கூர் KPDN இயக்குநர் முகமட் ஹனிப் ஆசாரி தெரிவித்திருந்தார்.

மேலும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களிலிருந்து மொத்தம் 27 டின் ரோன்95 பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை ஆய்வகப் பரிசோதனைக்காக மலேசிய வேதியியல் துறைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.