கோலாலம்பூர், நவ.13: உலு சிலாங்கூர், கோலா குபு பாருவில் உள்ள சுங்கை பெர்தாக் சுற்றுலாத் தளத்திற்கு அருகிலுள்ள சுங்கை லுயிட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் இருவரைத் தேடும் மற்றும் மீட்கும் பணி இன்று காலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தத் தேடுதல் நடவடிக்கையில், மலேசியாவின் சிறப்பு நடவடிக்கை மற்றும் மீட்புக் குழுவான STORM, மோப்ப நாய்கள் பிரிவைச் சேர்ந்த 2 நாய்கள், அரசு தற்காப்புப் படையின் (APM) சிலாங்கூர் சிறப்பு குழுவான SIERRA, அத்துடன் மலை வழிகாட்டிகள் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரதி இயக்குநர் அஷ்ருல் ரியெஸால் அஸ்பார் இதனைத் தெரிவித்தார்.

மேலும், தேடுதல் நடவடிக்கையில் வான்வழி நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ட்ரோன் குழுக்களும் களமிறக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, நேற்று காலை 10.15 மணியளவில் கண்டெடுக்கப்பட்ட ஓர் ஆணின் சடலம், யேமன் நாட்டைச் சேர்ந்தவருடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக அஷ்ருல் ரியெஸால் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் சுங்கை லுயிட் ஆற்றில் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கின்போது, மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் யேமன், இலங்கை, நேபாளம், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏழு வெளிநாட்டவர்கள் என மொத்தம் எட்டு பேர் ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் மூலம் இதுவரை ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.







