கோலாலம்பூர், நவ.20 – மாணவர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் உணர்வுரீதியான பாதிப்புகளை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மனநலப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
இது கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் மனநலப் பிரச்சனைகள் தீவிரமடைவதற்கு முன்னரே கண்டறிந்து உரிய உதவிகளை வழங்குவது அவசியம் என `Ikatan Komuniti Selamat` அமைப்பின் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தை தெரிவித்தார்.
இதற்காகப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், மாணவர்கள் தொழில்முறை மனநலச் சேவைகளை எளிதில் பெறுவதற்கான வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மேலும், பகடிவதை, இணையவழிப் பகடிவதை, கல்விசார் அழுத்தம், குடும்பப் பிரச்சனைகள் மற்றும் சமூகத் தனிமைப்படுத்தல் போன்றவை மாணவர்களின் மனநலத்தைப் பாதிக்கக்கூடிய முக்கியக் காரணிகளாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிகளில் புகார் அளிக்கும் முறைகளை உருவாக்குதல், புகார்கள் கிடைத்தவுடன் விரைவான நடவடிக்கை எடுத்தல் மற்றும் மனநலப் பாதிப்புகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிய ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்குதல் ஆகியவை அவசியம் என்றார் அவர்.
அதேவேளையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அச்சமின்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடிய பாதுகாப்பான குடும்பச் சூழலை உருவாக்குவதோடு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தொடர்ச்சியான ஆலோசனை மற்றும் மனநல ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
மேலும், மாணவர்களின் வெற்றியைத் தேர்வு முடிவுகள் மற்றும் கல்விச் சாதனைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக்கூடாது எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு மாணவரும் பாதுகாப்பாகவும் மதிக்கப்படுவதாகவும் உணரும் ஆதரவான பள்ளிச் சூழலை உருவாக்குவது அவசியம்.
இதனிடையே, மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என்றும், தற்கொலைத் தடுப்பு, மனநல விழிப்புணர்வு மற்றும் உதவி பெறுவதற்கான வழிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் லீ லாம் தை வலியுறுத்தினார்.







