ஷா ஆலாம், நவ.16 – பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்புச் சோதனை அமைப்புகள் மற்றும் தானியங்கி மாணவர் வருகைப் பதிவு முறைகளை அறிமுகப்படுத்துவது குறித்து சிலாங்கூர் மாநில அரசு பரிசீலித்து வருவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பள்ளிகளுக்கான உதவித் திட்டத்தை விரிவுபடுத்தி, சிற்றுண்டிச்சாலை, வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள் போன்ற அடிப்படை வசதிகளுடன் பள்ளிப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளடக்கத் திட்டமிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கான செலவினம், தேவையான ஏற்பாடுகள் மற்றும் சேவை வழங்குநர்களை நியமிப்பது தொடர்பான அம்சங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்றும், ஒரு மாணவருக்கு சுமார் 5 முதல் 10 ரிங்கிட் வரை செலவாகலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தின்போது பேசிய அவர், பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அங்கு முன்னர் நிகழ்ந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு அச்சம் காரணமாக மாணவர்களின் வருகை 30 விழுக்காடு வரை குறைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முக அடையாளத் தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் வருகையைத் தானாகப் பதிவு செய்து, அவர்கள் பள்ளிக்கு வந்தவுடன் பெற்றோருக்குத் தகவல் அனுப்பும் வசதியையும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமிருடின் தெரிவித்தார்.
இதற்கிடையில், பள்ளிகளுக்கு வெளியே சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
2024-ஆம் ஆண்டு தரவுகளின்படி, சிலாங்கூரில் உள்ள 942 பள்ளிகளில் 541 பள்ளிகளுக்கு மணிக்கு 30 கிலோமீட்டர் வேக வரம்பைக் குறிக்கும் அறிவிப்புப் பலகைகள் இல்லை.
மேலும், 290 பள்ளிகளில் வேகத்தடைகளும், 854 பள்ளிகளில் வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் சாலைத் தடுப்புகளும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண பள்ளி நிர்வாகங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொதுப்பணித் துறை ஆகியவை இணைந்து செயல்படுவதோடு தேவையான மேம்பாட்டுப் பணிகளுக்கு மாநில அரசு ஆதரவளிக்கும் என்றார் அவர்.
மேலும், பள்ளிகளின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் பென்யாயாங் (Selangor Penyayang) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தவும் மாநில அரசு தயாராக இருப்பதாக அவர் விளக்கினார்.
குறிப்பாக, வேகத்தடைகள் அமைத்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள பள்ளிகளில் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் மறுஆய்வு செய்யவுள்ளதாக அமிருடின் மேலும் குறிப்பிட்டார்.







