ஷா ஆலாம், அக்.23 — சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தின் தஞ்சோங் செப்பாட்டில் இந்தோனேசியாவைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கணவன், மனைவி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நிகழ்ந்ததாகக் கூறப்படும் இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் மீது முதலாளிக்குச் சொந்தமான பொருட்களைத் திருடியதாகவும், அவற்றைச் சேதப்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, அவரது உடலில் தீக்காயங்கள் ஏற்படும் வகையில் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக ஷாஸெலி தெரிவித்தார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முதலாளிகள் என்றும், அவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது ஷாஸெலி இதனைத் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் பினாங்கு, பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் மெர்பாவ், ஓரென் வர்த்தக மையத்தில் அமைந்துள்ள ஓர் வணிக வளாகத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் மீதான துன்புறுத்தல் மற்றும் அதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.







