ஈப்போ, ஆகஸ்ட் 16 — வெளிநாட்டிலிருந்து செயல்படுவதாக நம்பப்படும் இணைய மோசடி கும்பலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களைப் போலீஸ் கைது செய்துள்ளது.
32 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்த மூன்று சந்தேக நபர்களையும் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் பேராக் காவல்துறை கைது செய்தது.
அவர்கள் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, கெலானா ஜெயா, உலு கிளாங், டாமன்சாரா மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டதாக பேராக் காவல்துறை தலைவர் டத்தோ முகமட் அல்வி சைனல் அபிடின் தெரிவித்தார்.
22 வயதுடைய இளைஞர் ஒருவர் RM28,999 தொகையை இழந்தது தொடர்பாக அளித்த புகாரைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றதாக அவர் கூறினார்.
மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மோசடி கும்பலால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகளின் தடத்தை அதிகாரிகள் கண்டறிவதை சிரமமாக்கும் வகையில் இந்தத் தொடர்பாடல் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாக முகமட் அல்வி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாளை அவர்களுக்கான தடுப்புக் காவல் நிறைவடையவுள்ள நிலையில், குற்றவியல் சட்டத்தின் 420ஆவது பிரிவின் கீழ் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக தங்களை தொடர்புகொள்ளும் நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணம் அல்லது தனிப்பட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டாம்.
சட்ட அமலாக்க அதிகாரிகள் எனக் கூறி அச்சுறுத்தும் அழைப்புகளுக்கு எச்சரிக்கையுடன் பதிலளிக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.







