தெலுக் இந்தானில் ஆடவர் கொலை: வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட நால்வர் கைது

6 நவம்பர் 2026, 5:22 AM
தெலுக் இந்தானில் ஆடவர் கொலை: வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட நால்வர் கைது

ஷா ஆலாம், நவ.6 – பேராக், தெலுக் இந்தான், தாமான் பன்ஜோர் ஜெயா பகுதியில் ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, வெளிநாட்டவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிலிர் பேராக் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் சுவா கோக் லியான் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், உள்ளூர் பெண் ஒருவரும் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நான்காவது சந்தேக நபரான உள்ளூர் ஆடவர் நேற்று கைது செய்யப்பட்டார். அந்நபரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான விண்ணப்பம் இன்று காலை தாக்கல் செய்யப்படவுள்ளதாகக் காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிற்பகல் 3.53 மணியளவில் தெலுக் இந்தான் பகுதியில் உள்ள கடையொன்றில் நிகழ்ந்தது. அப்போது மூன்று ஆடவர்கள் பாராங்கத்தியால் பாதிக்கப்பட்ட நபரைச் சரமாரியாக வெட்டித் தாக்கியதாகக் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எனினும், இந்தக் கொலைக்கான உண்மையான நோக்கம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.