ஷா ஆலாம், நவ.17: சிலாங்கூரில் 2025-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்களால் RM52.9 மில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது 2024-ஆம் ஆண்டு பதிவான RM22.6 மில்லியன் இழப்பைக் காட்டிலும் இருமடங்குக்கும் அதிகமாகும் என மாநிலப் பேரிடர் மேலாண்மைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளில் உள்கட்டமைப்புச் சேதங்கள் RM26.6 மில்லியனாகவும், வீடுகளுக்கான சேதங்கள் RM15.3 மில்லியனாகவும் பதிவாகியுள்ளன. மேலும், விவசாயத் துறையில் RM9.6 மில்லியன், வணிக நிறுவனங்களில் RM1 மில்லியன் மற்றும் வாகனங்களுக்கு RM400,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

மலேசியப் புள்ளிவிவரத் துறையின் (DOSM) அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டு நாடு முழுவதும் வெள்ளத்தால் RM636.9 மில்லியன் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாநிலங்களின் அடிப்படையில் திரங்கானு RM89.2 மில்லியன் இழப்புடன் முதலிடத்திலும், கிளந்தான் RM88.5 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், ஜோகூர் RM72.1 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பத்து திகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீட் ஹாரூன் அமினார் ரஷீட் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது நஜ்வான் இத்தகவல்களை மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் வெளியிட்டார்.
வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிக நிவாரண மையங்கள் (PPS), உதவிகள் மற்றும் மீட்புப் பணிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்கூட்டிய வெள்ள எச்சரிக்கைகளைப் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்குதல், அரசு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் சமூக அளவிலான பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








