ஷா ஆலாம், நவ.15: சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 1,493-ஆகக் குறைந்துள்ளது.
சமூக நலத்துறையின் (JKM) இன்ஃபோபென்சானா (InfoBencana) இணையவழித் தகவலின்படி, சிலாங்கூரில் நேற்று மாலை 405 குடும்பங்களைச் சேர்ந்த 1,511 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை இந்த எண்ணிக்கை 398 குடும்பங்களைச் சேர்ந்த 1,493 பேராகக் குறைந்துள்ளது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 7 தற்காலிக நிவாரண மையங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பேராக் மாநிலத்தின் ஹிலிர் பேராக் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று மாலை 227 பேராக இருந்த எண்ணிக்கை, இன்று காலை நிலவரப்படி 85 குடும்பங்களைச் சேர்ந்த 293 பேராக உயர்ந்துள்ளதாக மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுவின் (JPBN) செயலகம் தெரிவித்தது.
மேலும், பேராக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று காலை முதல் இரவு வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக, லாருட், மாத்தாங் மற்றும் செலாமா, கெரியான், மஞ்சோங், ஹிலிர் பேராக், பாகான் டத்தோ, கிந்தா மற்றும் கம்பார் ஆகிய மாவட்டங்களில் இத்தகைய சீரற்ற வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.







