சிலாங்கூரில் சுமார் 700 வெள்ளத் தடுப்புக் குளங்களின் உரிமையாளர் விவரங்கள் மறுஆய்வு

15 நவம்பர் 2026, 5:00 AM
சிலாங்கூரில் சுமார் 700 வெள்ளத் தடுப்புக் குளங்களின் உரிமையாளர் விவரங்கள் மறுஆய்வு

அம்பாங், நவ.15 – சிலாங்கூரில் உள்ள சுமார் 700 வெள்ளத் தடுப்புக் குளங்களின் உரிமையாளர் மற்றும் பராமரிப்புப் பொறுப்பாளர்கள் குறித்த விவரங்களை மாநில அரசு மறுஆய்வு செய்து வருவதாக மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

முதற்கட்டத் தகவல்களின்படி, அவற்றில் சுமார் 200 குளங்கள் நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையின் (JPS) கட்டுப்பாட்டில் உள்ளன. எஞ்சியுள்ள குளங்களில் சில மேம்பாட்டாளர்களின் பொறுப்பிலும், சிலவற்றுக்குத் தெளிவான பராமரிப்புப் பொறுப்பாளர்கள் இல்லாத நிலையிலும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று அம்பாங் ஜெயா ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற `MADANI Kita Pandan 2026` நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத் தடுப்புக் குளங்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களின் பராமரிப்புப் பொறுப்புகளை ஊராட்சி மன்றங்கள் அல்லது JPS வசம் ஒப்படைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பராமரிப்புப் பணிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்த முடியும் என அவர் விளக்கினார்.

மேலும், முழுமையடையாத மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் மேம்பாட்டாளர்களின் பொறுப்பில் உள்ள சில குளங்கள் வெள்ளப் பாதிப்பு மற்றும் வண்டல் படிதல் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

எனவே, வெள்ள மேலாண்மை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதுடன், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், தனித்தனியாகச் செயல்பட்டு வரும் 185 வெள்ளத் தடுப்புக் குளங்கள் மற்றும் ஏரிகளை ஆற்று நீர் அமைப்புடன் இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் நீரோட்ட மேலாண்மை மற்றும் வடிகால் கொள்ளளவை மேம்படுத்தி, வெள்ள அபாயத்தைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் நீர் சேமிப்புக் கொள்ளளவை உருவாக்குவதற்கும் அணைகளில் நீர் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்கும், எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்குள் அணைகளின் நீர்மட்டத்தைப் படிப்படியாக 30 விழுக்காடாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸாம் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.