வெள்ளத்தின் போது உணவு விநியோகத்தை ஃபாமா கண்காணிக்கிறது

20 நவம்பர் 2026, 1:50 AM
வெள்ளத்தின் போது உணவு விநியோகத்தை ஃபாமா கண்காணிக்கிறது

புத்ராஜெயா, நவ.20: நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உணவுப் பொருட்களின் விநியோக நிலவரத்தை மத்திய விவசாயச் சந்தைப்படுத்தல் வாரியமான ஃபாமா (FAMA) தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதனை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.

எனினும், இதுவரை நீர்மட்டம் திடீரென உயர்ந்து உணவுப் பொருட்களின் விநியோகத்தைப் பாதிக்கக்கூடிய நிலைமை குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். உணவுப் பொருட்களின் விநியோகத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், முட்டையின் விலையும் வழக்கமான நிலவரத்தைவிட சற்று குறைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், எதிர்வரும் எல் நினோ பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமைச்சு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, இவ்வாண்டு டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாடா (MADA), கடா (KADA) உள்ளிட்ட விவசாய அமைப்புகள் வாயிலாக விவசாயிகளுக்கு விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பாக காய்கறிச் சாகுபடியில் ஈடுபடுவோர் வெப்பம் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எல் நினோவால் கடல் வெப்பநிலை அதிகரித்து, மீன்கள் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லக்கூடும் என்பதால் கரையோர மீனவர்களின் வருமானம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், நாட்டில் உறையவைக்கப்பட்ட மீன்களின் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதால் மீன் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது என அவர் உறுதியளித்தார்.

தேவை ஏற்பட்டால் சபாவிலிருந்து உறையவைக்கப்பட்ட மீன்களைக் கொண்டுவருவதுடன், இறக்குமதி மூலமாகவும் விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார் அவர்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற Festival of Ideas (FOI) 2026 விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப் பாதுகாப்பு மன்றத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.