ஷா ஆலாம், நவ.20: சிலாங்கூரில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘BAIK Selangor’ திட்டத்தின் மூலம், சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்ப்பதற்கு தகுதியுடைய குடும்பங்களுக்கு RM5,000 முதல் RM10,000 வரை நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித் திட்டத்தின் கீழ், வீடுகளில் ஏற்படும் சேதங்கள் அடிப்படைக் கட்டமைப்புப் பகுதிகள் மற்றும் குடியிருப்பு அறைகள் என இரண்டு முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கேற்ப பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என மாநில வீட்டுவசதித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்தார்.
அடிப்படைக் கட்டமைப்புப் பிரிவின் கீழ், கசிவு ஏற்படும் கூரைகளைச் சீரமைத்தல், சேதமடைந்த தரைகளைப் பழுதுபார்த்தல், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மாற்றுதல், மின்சார வயரிங் மற்றும் நீர்க்குழாய் கட்டமைப்புகளைச் சீரமைத்தல் போன்ற பணிகள் இடம்பெறும்.
அதேவேளையில், குடியிருப்பு அறைகள் தொடர்பான பிரிவில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை மற்றும் குளியலறை ஆகியவற்றில் ஏற்படும் சேதங்களைச் சீரமைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்படும் பழுதுபார்ப்பு உதவித்தொகை, சேதத்தின் தீவிரம், மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகளின் தேவை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டின் அடிப்படையில் RM5,000 முதல் RM10,000 வரை நிர்ணயிக்கப்படும் என்றும் போர்ஹான் கூறினார்.
இத்திட்டத்தை யாயாசான் மெஸ்ரா சிலாங்கூர் (YMS) தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்து செயல்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என சிலாங்கூரின் அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய வகையில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.
தகுதியுடைய பயனாளிகளை இலக்காகக் கொண்டு, அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் மக்கள் சேவை மையங்கள் அல்லது சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலகங்கள் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு முன்னர் தகுதிச் சரிபார்ப்பு, சம்பந்தப்பட்ட வீடுகளுக்கான நேரடி கள ஆய்வு, பழுதுபார்ப்புப் பணிகளின் வரம்பு மற்றும் அதற்கான செலவின மதிப்பீடு ஆகியவை மேற்கொள்ளப்படும். அதன் பின்னரே இறுதி ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, BAIK Selangor திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தேவையான மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் RM10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.







