கோலா சிலாங்கூர், நவ. 12 – சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சிலாங்கூர் மந்திரி பெசார் அறக்கட்டளை RM150,000க்கும் அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் மூலம் 7 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், வழங்கப்பட்டுள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி அகமட் அஸ்ரி சைனால் நோர் தெரிவித்தார்.
மேலும், நடமாட முடியாமல் படுக்கையில் இருப்பவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை வழங்கப்பட்ட உதவிகளுக்காக ஏறத்தாழ RM150,000 செலவிடப்பட்டுள்ளதுடன், இன்று மட்டும் RM15,000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோலா சிலாங்கூரில் உள்ள புக்கிட் கூச்சிங் சமயப் பள்ளி தற்காலிக நிவாரண மையத்தில் உதவிப் பொருட்களை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் வடிகால்கள் மற்றும் நீர்வழிப் பாதைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தும் பணிகள் ஊராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிலாங்கூர் மாநில விளையாட்டு மன்றம் (MSN), தன்னார்வலர்கள் மற்றும் பல்கலைக்கழக அமைப்புகளுடன் இணைந்து வெள்ளத்திற்குப் பிந்தைய தூய்மைப் பணிகளையும் MBI அறக்கட்டளை முன்னெடுத்து வருகிறது. இதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று பிற்பகல் 2.11 மணி நிலவரப்படி, கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் ஏழு தற்காலிக நிவாரண மையங்களில் 317 குடும்பங்களைச் சேர்ந்த 1,143 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவற்றில் டத்தோ மஹாராஜா லேலா தேசியப் பள்ளியில் 393 பேரும், கம்போங் புக்கிட் கூச்சிங் சமயப் பள்ளியில் 283 பேரும் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தம் செய்ய உதவி தேவைப்படும் பொதுமக்கள் MBI அறக்கட்டளையைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அகமட் அஸ்ரி தெரிவித்தார்.









