சிலாங்கூரில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீடுகளைச் சீரமைக்க `BAIK Selangor` திட்டம்

13 நவம்பர் 2026, 9:18 AM
சிலாங்கூரில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீடுகளைச் சீரமைக்க `BAIK Selangor` திட்டம்

ஷா ஆலாம், நவ. 13: சிலாங்கூரில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வீடுகளைப் பழுதுபார்த்து, பாதுகாப்பான குடியிருப்புச் சூழலை ஏற்படுத்த 2027-ஆம் ஆண்டு `BAIK Selangor` புதிய வீட்டு உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Bantuan Asas dan Ihsan Kediaman (BAIK Selangor) எனப்படும் இத்திட்டத்தின் கீழ், தகுதியான ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் சேதத்தின் அளவு மற்றும் குடும்பத்தின் தேவைகளைப் பொறுத்து RM5,000 முதல் RM10,000 வரை நிதியுதவி வழங்கப்படும் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மொத்தம் 1,000 வீடுகள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக RM10 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

இந்தத் திட்டம் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் யாயாசான் மெஸ்ரா சிலாங்கூர் (Yayasan Mesra Selangor – YMS) அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும்.

மேலும், மாநில அரசின் துணை நிறுவனங்கள், வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் நிதிப் பங்களிப்புகள், சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் (CSR) மூலமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

சிலாங்கூர் மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றியபோது அமிருடின் இதனை அறிவித்தார்.

இதற்கிடையில், மிகவும் மோசமான மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், 'ரூமா கித்தா சிலாங்கூர்' (Rumah Kita Selangor) திட்டத்திற்கும் RM3 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வீடுகள் புதிதாகக் கட்டித்தரப்படுவதுடன், பழுதடைந்த வீடுகளைச் சீரமைப்பதற்கும் உதவிகள் வழங்கப்படும்.

குறிப்பாக, பாரம்பரியக் கிராமங்களில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கும், பூர்வகுடி மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என அமிருடின் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்டுள்ள RM3 மில்லியன் நிதியில் RM1 மில்லியன் பூர்வகுடி சமூகத்தினரின் வீட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காகத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.