ஷா ஆலாம், நவ 19 : மலேசியாவிலேயே முதல் முறையாக, ஷா ஆலாம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆறு மாத கால முன்னோட்டத் திட்டமாக, இரு மின்சாரக் குப்பை அழுத்தி லாரிகளை (lori kompaktor elektrik) KDEB கழிவு நிர்வகிப்பு நிறுவனம் (KDEBWM) பயன்படுத்த உள்ளது.
சுமையுடன் (muatan) இந்த இரு லாரிகளும் 180 முதல் 220 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கக்கூடியவை என்றும், இது டீசல் குப்பை அழுத்தி லாரிகளின் செயல்பாட்டுத் தூரத்திற்குச் சமமானது என்றும் அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முஹமட் தாஹிர் தெரிவித்தார்.

உண்மையான களச் செயல்பாட்டில் மின்சார லாரிகளின் பயன்பாடு எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளது என்பதை மதிப்பிடுவதற்காக, KDEBWM-இன் துணை நிறுவனத்தின் மூலம் இந்த முன்னோட்டத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
திடக்கழிவு நிர்வகிப்பு பணிகளில் இவற்றின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து KDEBWM பரிசீலிப்பதற்கு முன்பு, இந்த லாரிகளின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்படும் என்று ரம்லி குறிப்பிட்டார்.

“முன்னோட்டத் திட்டத்தின் மதிப்பீடு நிறைவடைந்த பிறகு, இரண்டாம் கட்டமாக மின்சார 'ரோல்-ஆன் ரோல்-ஆஃப்' (RORO) வகை லாரிகளை அறிமுகப்படுத்தவும் KDEBWM திட்டமிட்டுள்ளது,” என்றார் அவர்.
இதனிடையே, இந்த மின்சாரக் குப்பை அழுத்தி லாரிகளின் பயன்பாடு, ஒரு லாரிக்கு ஆண்டுக்கு 10 முதல் 20 டன் வரையிலான கரியமில வாயு (கார்பன்) வெளியேற்றத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

டீசல் எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதுடன், சேவைப் பணிகளில் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிலாங்கூர் மாநிலத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.
“இந்த முயற்சியின் மூலம், ஒரு லாரிக்கு ஆண்டுக்கு 25,000 ரிங்கிட் முதல் 40,000 ரிங்கிட் வரை எரிசக்தி மற்றும் பராமரிப்புச் செலவுகளைச் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள சுல்தான் சலாவுதீன் அப்துல் அஸீஸ் ஷா (SAAS) கட்டிடத்தின் அனெக்ஸ் மண்டபத்தில் நடைபெற்ற KDEBWM மின்சாரக் குப்பை அழுத்தி லாரி அறிமுக விழாவில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு கூறினார்.








