அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் SELKitar மறுசுழற்சித் திட்டம் அடுத்து ஆண்டு விரிவுபடுத்தப்படும்

23 அக்டோபர் 2026, 9:16 AM
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் SELKitar மறுசுழற்சித் திட்டம் அடுத்து ஆண்டு விரிவுபடுத்தப்படும்

ஷா ஆலாம், அக். 23 – சிலாங்கூர் மறுசுழற்சித் திட்டத்தை (SELKitar) அடுத்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் விரிவுபடுத்த KDEB கழிவு மேலாண்மை நிறுவனம் (KDEBWM) திட்டமிட்டுள்ளது.

குடியிருப்பாளர்களிடையே இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பும், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் இத்திட்டத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளதும் இந்த விரிவாக்கத்திற்குக் காரணம் என KDEBWM நிர்வாக இயக்குநர் டத்தோ ரம்லி முகமட் தாஹிர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட SELKitar திட்டத்தின் மூலம் இதுவரை 531 டன் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை, ஏறத்தாழ 4 இலட்சம் வீடுகளில் இருந்து 50,000 கிலோகிராமுக்கும் அதிகமான மறுசுழற்சிக் கழிவுகளைச் சேகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 8 ஊராட்சி மன்றங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன என்று ரம்லி மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

அனைத்து ஊராட்சி மன்றங்களும் இத்திட்டத்தில் இணைவதே KDEBWM-இன் இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை மாநிலத்தின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துவதற்கும், மறுசுழற்சிப் பொருள்களைச் சேகரிப்பதற்கென பிரத்தியேக லாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் சிலாங்கூர் மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ரம்லி வேண்டுகோள் விடுத்தார்.

இத்திட்டத்தின் கீழ், மறுசுழற்சிக்காக வழங்கப்படும் பொருள்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

வகைப்படுத்துதல்: பிளாஸ்டிக், காகிதம், அலுமினியம், அட்டைப்பெட்டிகள் மற்றும் பான அட்டைப்பொதிகள் எனத் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்.

சுத்தம் மற்றும் உலர்ந்த நிலை: மறுசுழற்சிப் பொருள்கள் சுத்தமாகவும் ஈரமின்றியும் இருக்க வேண்டும்.

பொதியிடுதல்: அவற்றைப் பெட்டிகள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைக்க வேண்டும்.

சேகரிப்புக்காக வைத்தல்: சேகரிப்பு அட்டவணையின்படி வீடுகளுக்கு வெளியே பொருள்களை வைக்க வேண்டும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.