குப்பை சேகரிப்பு, பொது இடத் தூய்மையில் எந்தவித சமரசமும் கூடாது: சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

12 அக்டோபர் 2026, 6:31 AM
குப்பை சேகரிப்பு, பொது இடத் தூய்மையில் எந்தவித சமரசமும் கூடாது: சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தல்

ஷா ஆலாம், அக். 12 – 2007ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது இடத் தூய்மைப் பராமரிப்புச் சட்டத்தை (சட்டம் 672) சிலாங்கூர் அமல்படுத்தவுள்ள நிலையில், பொது இடங்களை தூய்மையாகப் பராமரிக்கும் சேவைகளின் செயல்திறன், தரம் ஆகியவற்றில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.

இதனை சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்-ஹாஜ் இன்று இஸ்தானா ஆலாம் ஷா வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

குப்பைகளைச் சேகரிக்கும் சேவைகள் குறித்த நேரத்திலும், நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். புதிய திடக்கழிவு மேலாண்மை முறை அறிமுகப்படுத்தப்படுவதால் பொதுமக்களுக்கான சேவைகளின் தரம் பாதிக்கப்படக் கூடாது என்றார் சுல்தான்.

சிலாங்கூர் மாநிலம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்த சேவைகளைச் சார்ந்திருப்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சிலாங்கூர் சுல்தான் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு (KPKT), சிலாங்கூர் மாநில அரசு மற்றும் ஊராட்சி மன்றங்கள் (PBT) ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தை மக்களின் நலன் கருதி விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

இதற்கு முன்னதாக, சட்டம் 672-ஐ ஏற்றுக்கொள்வது தொடர்பான இறுதி முடிவை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எடுக்க முடியும் என மாநில அரசு எதிர்பார்த்திருந்தது. இந்த முடிவு உறுதிசெய்யப்பட்டால், அச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மலேசியாவின் எட்டாவது மாநிலமாக சிலாங்கூர் திகழும்.

இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது இடத் தூய்மைப் பராமரிப்புச் சேவைகளின் தரத்தை மேலும் உயர்த்த முடியும்.

இதற்குத் தேவையான கூடுதல் நிதியுதவியை வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சின் வாயிலாக மத்திய அரசு வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சிலாங்கூரில் கழிவுகளை எரித்து ஆற்றல் உற்பத்தி செய்யும் நிலையங்களை (WTE) அமைப்பதற்கான திட்டமிடல் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து, அவற்றை விரைவுபடுத்த வேண்டும் என சுல்தான் வலியுறுத்தினார்.

இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பையும் நடைமுறை வசதிகளையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.