டோஹா, நவ 8 : செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்களின் பொறுப்பான வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தையும் மலேசியா வலியுறுத்தியுள்ளது.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மக்களின் வாழ்க்கை முறையையும், வேலை செய்யும் முறைகளையும் தொடர்ந்து மாற்றியமைத்து வருகிறது; இவ்வேளையில், மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் நம்பிக்கையுடன் பங்கேற்பதற்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் இன்றியமையாதவை என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
அனைத்துலக தொலைத் தொடர்பு ஒன்றியத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான மாநாட்டின் (PP-26) ஒரு பகுதியாக நடைபெற்ற அமைச்சரவை வட்டமேஜை கலந்துரையாடலின்போது போது அவர் அதனைத் தெரிவித்தார்.
டிஜிட்டல் மாற்றத்தின் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு விரிவான அணுகுமுறையை கோடிட்டுக் காட்டும் 'டோஹா அமைச்சர் பிரகடன வரைவை' (Draft Doha Ministerial Declaration) மலேசியா வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த பிரகடனம் இணைய பாதுகாப்பு, இணையத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பொறுப்புடன் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றில் வலுவான கவனத்தை சரியாகச் செலுத்தியுள்ளது.
மலேசியாவைப் பொறுத்தவரை, கண்டுபிடிப்புகள் சரியான பாதுகாப்பு வழிமுறைகளுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இது டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வழங்கும் வாய்ப்புகளை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான நம்பிக்கையை வழங்கும்," என்று அவர் கூறினார்.
மலேசியாவின் தேசிய டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலின் மையமாக விளங்கும் அர்த்தமுள்ள இணைப்புத்திறனை உறுதி செய்தல், டிஜிட்டல் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலை வளர்த்தல் ஆகிய மூன்று முன்னுரிமைகளை இந்த பிரகடனம் பிரதிபலிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அர்த்தமுள்ள இணைப்புத்திறன் என்பது வெறும் இணையத் தொடர்பைத் தாண்டி, தொலைத்தொடர்பு சேவைகள் மலிவு விலையிலும், நம்பகமானதாகவும், சமூகங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
அவசரநிலைகள் மற்றும் இடையூறுகளின் போது அத்தியாவசியத் தொடர்புகளின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, நெகிழ்வான மற்றும் நிலையான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் பிரகடனம் செலுத்தும் முக்கியத்துவத்தையும் மலேசியா வரவேற்றது.
டிஜிட்டல் மாற்றம் என்பது புவியியல் இருப்பிடம் அல்லது டிஜிட்டல் தயார்நிலை அளவைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஃபஹ்மி கூறினார்.
மலேசிய அரசாங்கம் டிஜிட்டல் திறன் மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதோடு, அதிகமான மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பயனடைவதற்கான கண்டுபிடிப்புகளையும் ஆதரிப்பதாக அவர் மேலும் கூறினார்.
"AI மற்றும் பிற தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், வளரும் நாடுகளும் பின்தங்கிய சமூகங்களும் இதில் பின்தங்கிவிடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றை வடிவமைக்கவும், அவை உருவாக்கும் வாய்ப்புகளிலிருந்து பயனடையவும் வாய்ப்பைப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.






