ஷா ஆலாம், நவ.3: மாணவர்களின் டிஜிட்டல் அறிவையும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும் பயன்படுத்தும் திறனையும் மேம்படுத்தும் நோக்கில், 2027-ஆம் ஆண்டு முதல் முதலாம் ஆண்டு மற்றும் படிவம் ஒன்றுக்கான புதிய பாடத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபட்லினா சிடேக் இதனைத் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களிடையே விமர்சனச் சிந்தனை, தகவல்களை ஆய்வு செய்து மதிப்பிடும் ஆற்றல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் கையாளும் திறன் ஆகியவற்றை வளர்ப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்
செயற்கை நுண்ணறிவை வெறுமனே பதில்களைப் பெறுவதற்கான கருவியாக மட்டுமே பயன்படுத்தாமல், சரியான கேள்விகளை எழுப்பி சுயமாகச் சிந்திக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே கல்வி அமைச்சின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று டாமான்சாரா உத்தாமா தேசியப் பள்ளியில், டிஜிட்டல் அமைச்சு கல்வி அமைச்சிடம் `Sekolahku` இணையத் தளத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஃபட்லினா இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் கலந்துகொண்டார்.
இதற்கிடையில், பள்ளிகளின் மேம்பாடு மற்றும் வசதிகளைச் சீரமைப்பதற்காக 50,000 ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டையும் ஃபட்லினா அறிவித்தார்.
மாணவர்களுக்கு ஏற்ற கற்றல் சூழலை மேலும் வசதியானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தங்களது பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் இருப்பின், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG) கல்வி அமைச்சு ஏற்படுத்தியுள்ள அதிகாரப்பூர்வ விண்ணப்ப வழிமுறைகளைப் பயன்படுத்தி உதவிக்கு விண்ணப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.






