ஷா ஆலாம், அக்.30 – தொடக்கப்பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையால் மாணவர்களின் சிந்திக்கும் திறனும் விமர்சன ஆற்றலும் பாதிக்கப்படாமல் இருப்பதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.
இதனை மலேசிய சைபர் பயனீட்டாளர் சங்கம் (MCCA) வலியுறுத்தியுள்ளது.
ஒரு கேள்விக்கான பதிலைப் பெறுவதற்கும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் மாணவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தையே முழுமையாகச் சார்ந்திருக்கும் நிலை உருவாகக்கூடும் என்பதே தங்களது முக்கியக் கவலையாக இருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் சிராஜ் ஜலீல் தெரிவித்தார்.
இத்தகைய அதிகப்படியான சார்பு, மாணவர்களின் அடிப்படைச் சிந்தனைத் திறனையே படிப்படியாகப் பாதிக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், 2027-ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பப் பாடத்தின் வாயிலாக ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் நேற்று அறிவித்திருந்தார்.
ஏஐ தொழில்நுட்பமானது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான உதவிக் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அவர்களின் சுய சிந்தனை மற்றும் கற்றல் செயல்முறைக்கு மாற்றாக அமைந்துவிடக் கூடாது என்றும் சிராஜ் ஜலீல் வலியுறுத்தினார்.
குறிப்பாக, ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களைவிட அதிக அறிவுடையது அல்லது மிக விரைவாகப் பதில்களை வழங்கக்கூடியது என்ற எண்ணம் மாணவர்களிடையே உருவானால், அவர்கள் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பதைவிட ஏஐ தொழில்நுட்பத்தையே நாடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
கல்வி என்பது வெறுமனே தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவது மட்டுமல்ல. அவர்களை வழிநடத்துவது, சிந்திக்கும் திறனை வளர்ப்பது, சரியான அணுகுமுறைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான பண்புகளையும் கற்றுக்கொடுப்பது போன்ற முக்கியப் பொறுப்புகளும் ஆசிரியர்களுக்கு உள்ளது.
மேலும், பள்ளிகளில் ஏஐ கல்வியை அறிமுகப்படுத்தும்போது மாணவர்கள் அந்தத் தொழில்நுட்பத்தை எவ்வளவு திறமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடக் கூடாது.
மாறாக, தகவல்களை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் திறன், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல், தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தும் பழக்கம் மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆகியவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.







