ஷா ஆலாம், நவ 19 : பேராக்,கோலா கங்சாரில் உள்ள ஒரு முழு நேர தங்குமிடப் பள்ளியில் மூன்றாம் படிவ மாணவர் உயிரிழந்த இடத்திற்கு அருகிலிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகள், விசாரணைக்கு உதவும் வகையில் போலிசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் நல்ல முறையில் இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தடயவியல் துறையினரின் பரிசோதனை இன்று காலை 9 மணிக்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடெக் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் வகையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் சில நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தற்காலிகப் பணி விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தாம் தீவிரமாகக் கருதுவதாகவும், விசாரணை முழுமையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்ய அரச மலேசிய போலீஸ் படைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
தொடர்புடைய தரப்பினருடன் தாம் கலந்துரையாடியுள்ளதாகவும், உடனடி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பேராக் மாநிலக் கல்வித் துறை இயக்குநர் மற்றும் முழு நேர தங்குமிடப் பள்ளி நிர்வாகப் பிரிவு இயக்குநர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஃபட்லினா தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை ஆய்வு செய்வதற்காகப் பள்ளி ஆய்வாளர் குழு இன்று அப்பள்ளிக்குச் செல்லவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிச் சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு, தேர்வுகள் இல்லாத மாணவர்கள் நாளை வெள்ளிக்கிழமை வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் மற்றும் சமூக ஆதரவு உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
விசாரணையில் கவனக்குறைவோ, பாதுகாப்பு விதிமீறலோ நிரூபிக்கப்பட்டால் கல்வி அமைச்சு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அமைச்சர், இச்சம்பவம் குறித்து யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் குடும்பத்தினரின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஒரு பிள்ளையை இழப்பதன் வலியைத் தம்மால் நன்கு உணர முடிகிறது என்றும், இந்தக் கடுமையான சோதனையை எதிர்கொள்ள அக்குடும்பத்தினருக்கு மனவலிமை கிடைக்கப் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.







