பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களை கையாள ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அவசியம் – ஃபட்லினா

21 அக்டோபர் 2026, 1:37 AM
பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களை கையாள ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அவசியம் – ஃபட்லினா

கோலாலம்பூர், அக். 21 – பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பகடிவதை சம்பவங்களுக்கு உடனடியாகப் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீண்டகாலப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடேக் வலியுறுத்தியுள்ளார்.

பகடிவதை தொடர்பான ஒவ்வொரு புகாரையும் ஆசிரியர்கள் தாமதமின்றிக் கவனத்தில் கொண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப உரிய தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனைப் பெற்றிருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தின் தன்மையைச் சரியாகப் புரிந்துகொள்வது, பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் பகடிவதையில் ஈடுபட்ட மாணவரின் நிலைமையை மதிப்பிடுவது, அதற்கேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஆகியவை ஆசிரியர் பயிற்சியின் முக்கிய அங்கங்களாக இடம்பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கான அளவில், பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பகடிவதை தடுப்புச் சட்டம் தொடர்பான விளக்க நிகழ்ச்சியுடன் இணைந்த பகடிவதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது ஃபட்லினா இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள மலாய் மொழி ஆசிரியர் கல்விக் கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் துறையின் சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸ்லினா ஒத்மான் சைட்டும் கலந்துகொண்டார்.

பள்ளிகளில் பகடிவதை சம்பவங்களைக் கையாள்வது தனிப்பட்ட ஆசிரியர்களின் பொறுப்பாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது என்று வலியுறுத்திய ஃபட்லினா, இவ்விவகாரத்தில் அனைத்து நிர்வாக நிலைகளிலும் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் என்றார்.

ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD), மாநிலக் கல்வித் துறைகள் (JPN) தொடங்கி கல்வி அமைச்சு (KPM) வரை அனைத்து நிலைகளிலும் ஒருமித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், எதிர்கால ஆசிரியர்களுக்கான பயிற்சியில் மாணவர்களின் பண்புநலன் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் நற்பண்புகளை வளர்த்து, ஒழுக்கமிக்க சமூகப் பொறுப்புணர்வுள்ள தலைமுறையை உருவாக்கும் திறன் ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும். இது பள்ளிகளில் பகடிவதை பிரச்சனையைக் கையாள்வதற்கு அடித்தளமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டமான பிசா (PISA) தொடர்பான முந்தைய அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, பிள்ளைகளின் கல்வியில் பெற்றோரின் ஆதரவு குறைந்து வருவது குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என ஃபட்லினா தெரிவித்தார்.

வீட்டில் பெற்றோரிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காதது மாணவர்களின் கல்விச் சூழலையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, பிள்ளைகள் பள்ளியில் எதிர்கொள்ளும் அனுபவங்கள், சவால்கள் மற்றும் பிரச்சனைகளைப் பெற்றோர் ஆழமாகப் புரிந்துகொண்டு, அவர்களின் கல்விப் பயணத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.