ஷா ஆலாம், அக் 14: புகைமூட்டக் காலத்தின் போது பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த விபரத்தைப் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
தேசிய புகைமூட்டச் செயல் திட்டத்தின் (PTJK) வழிகாட்டுதலின்படி கல்வி அமைச்சு பள்ளிகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கத் தொடங்கியுள்ளதாகக கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், காற்று மாசு குறியீடு (IPU) 100 புள்ளிகளைத் தாண்டும் போது வகுப்பறைக்கு வெளியிலான வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
மேலும், காற்று மாசு அளவு 200 புள்ளிகளைக் கடக்கும் போது பள்ளிகள் அதிகாரப்பூர்வமாக மூடப்படும்.
சுற்றுச்சூழல் நிலவரம் மற்றும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டே பள்ளிகளை மூடுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
காற்றின் தரம் மிகக் குறுகிய காலத்தில் மாறக்கூடும் என்பதால், தற்போதைய சூழலைக் கணக்கில் கொள்ளாமல் பல நாட்களுக்கு முன்பே பள்ளிகளை மூடினால், காற்றின் தரம் சீரடைந்த பிறகும் மாணவர்கள் தங்களின் கற்றல் நேரத்தை இழக்க நேரிடும் என்று அவர் விளக்கினார்.
புகைமூட்டத்தின் போது ஒவ்வொரு நாளும் பள்ளிகளின் செயல்பாட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் பெற்றோர்களின் கவலையைத் தான் புரிந்து கொள்வதாகவும், மாணவர்களின் கல்வியைப் பாதிக்காமல் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கவே இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஃபத்லினா சிடெக் மேலும் கூறினார்.







