ஷா ஆலாம்,நவ 18 : கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வரையில், 2027-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்வதற்கு ஆறு வயதுடைய 73,498 பிள்ளைகளின் பெற்றோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டடதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
2027-ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு சேர்க்கைக்காகப் பெறப்பட்ட மொத்த 491,649 விண்ணப்பங்களில் இந்த எண்ணிக்கையும் அடங்கும் என்று கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபட்லினா சிடெக் கூறினார்.
இதில் 418,151 விண்ணப்பங்கள் ஏழு வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகளுடையது என்று அவர் குறிப்பிட்டார்.
2027-ஆம் கல்வியாண்டில் , ஆறு வயது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பது பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வ ரீதியிலே செயல்படுத்தப்படுகிறது.
இந்த மாறுதல் காலக்கட்டத்தில் ஏழு வயதுப் பிரிவினருக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
"பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் தயார்நிலையின் அடிப்படையில் முடிவெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே கல்வி அமைச்சின் முன்னுரிமையாகும்.
அதே வேளையில், முதலாம் ஆண்டில் சேர விரும்பும் ஆறு வயது பிள்ளைகளை ஏற்றுக் கொள்வதற்கான திறனையும் தயார் நிலையையும் கல்வி அமைப்பு கொண்டிருப்பதும் உறுதி செய்யப்படுமென அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.







