பூஞ்சாக் ஆலாம் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க நான்கு வழிச்சாலை: ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

19 நவம்பர் 2026, 2:27 AM
பூஞ்சாக் ஆலாம் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க நான்கு வழிச்சாலை: ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்
பூஞ்சாக் ஆலாம் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க நான்கு வழிச்சாலை: ஆட்சிக்குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலாம், நவ 19 : ஷா ஆலாம் மற்றும் கோலா சிலாங்கூர் இடையிலான சாலையைப் பயன்படுத்துவோர் இனிவரும் காலங்களில் இன்னும் வசதியாகப் பயணிக்க முடியும்.

தற்போதுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இதற்காக பூஞ்சாக் ஆலாம், கோல சிலாங்கூரில் உள்ள பெர்சியாரான் மொக்தார் டஹாரி (B49) சாலையை நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்படுத்த 128 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக உட்கட்டமைப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இசாம் ஹாஷிம் தெரிவித்தார்.

உள்ளூர் மக்கள் கத்ரி (Guthrie) நெடுஞ்சாலைக்குச் செல்வதற்கான குறுக்குவழியாக இச்சாலை விளங்குவதாலும், டமான்சாரா-ஷா ஆலம் நெடுஞ்சாலை (DASH) திறக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் சாலை மற்றும் நெடுஞ்சாலை திட்டத்தின் (JALUR 2026-2035) ஆய்வுகளின்படி, பெர்சியாரான் மொக்தார் டஹாரி சாலைக்கு உண்மையில் ஆறு வழித்தடங்கள் தேவைப்படுகின்றன.

இருப்பினும், ஒரு பகுதியில் சாலை அகலமாகவும் மற்றொரு பகுதியில் குறுகலாகவும் அமைந்து மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், சாலையின் அமைப்பை மறுஆய்வு செய்யுமாறு பொதுப் பணித் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

மேலும், ஜாலான் B49 மற்றும் ஜாலான் புக்கிட் செராக்கா சந்திப்பு முதல் ஜாலான் புக்கிட் செராக்கா மற்றும் ஜாலான் கோல சிலாங்கூர் (FT54) சந்திப்பு வரையிலான ஜாலான் FT1210 சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் 2027 செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இசாம் குறிப்பிட்டார்.

அதிகரித்து வரும் வாகன நெரிசலைக் கையாள, சுங்கை பூலோ ஆற்றின் குறுக்கே ஒருவழிப் பாதையாக இரு வழித்தடங்களைக் கொண்ட புதிய பாலம் அமைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும்.

பூஞ்சாக் ஆலாம் நகரத்தைச் சிறந்த மற்றும் எளிதில் அணுகக்கூடிய போக்குவரத்து இணைப்புகளைக் கொண்ட நகரமாக மேம்படுத்துவதே மாநில அரசாங்கத்தின் இலக்காகும் என்று அவர் கூறினார்.

இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்புத் திட்டங்களில், கட்டுமான அனுமதி வழங்கப்படும்போது தனியார் மேம்பாட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட சாலை மேம்பாட்டுப் பங்களிப்புகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

எனினும், மேம்பாட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிகள் நிறைவடையாமலோ அல்லது தொடங்கப்படாமலோ இருப்பதால், இத்தகைய சாலை விரிவாக்கப் பணிகளின் கால அட்டவணை சில நேரங்களில் தாமதமாவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.