ஷா ஆலாம், நவ.4: சிலாங்கூரின் புஞ்சாக் ஆலாம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை ஆற்றுநீர் கரைபுரண்டு ஓடியதைத் தொடர்ந்து, பல சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Threads சமூக ஊடகப் பயனரான aainaasaufi, கோலாலம்பூரில் உள்ள தனது பணியிடத்திற்குச் செல்வதற்காக வழக்கமாகப் பயன்படுத்தும் அவதார் தளவாடப் பொருட்கள் கடைக்கு அருகிலுள்ள சந்திப்புப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலவரத்தைப் பகிர்ந்துள்ளார்.
இன்று காலை சுமார் 8.30 மணியளவில் அவர் வெளியிட்ட பதிவின்படி, அப்பகுதியில் உள்ள ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து, கரைபுரண்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றுப் பாதையாகப் பயன்படுத்தப்படும் ஜாலான் டாவுனான், ஆலாம் பெர்டானா வழியாகச் செல்லும் சாலையிலும் ஆற்றின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்துள்ளதைக் காட்டும் காணொளிப் பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையில், ஈஜோக் சந்திப்பிலிருந்து புஞ்சாக் ஆலாம் நோக்கிச் செல்லும் வழியில் நீண்ட தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நெடுஞ்சாலைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சில சாலைகளில் வெள்ளநீரைக் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தற்காலிகமாகப் புஞ்சாக் ஆலாம் நோக்கிய பயணத்தைத் தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, சுபாங் மலாய் கிராமத்தில் தனது குடும்பத்தினர் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் வெள்ளப் பாதிப்புகள் குறித்தும் மற்றொரு Threads பயனரான thatswhynununana கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 25, அக்டோபர் 17, நவம்பர் 2 மற்றும் நவம்பர் 4 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட நான்கு புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் மூலம், தனது குடும்பத்தினர் வசிக்கும் பகுதியில் வெள்ளப் பாதிப்பு மீண்டும் மீண்டும் ஏற்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, தங்களது குடும்பத்தினர் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளப் பிரச்சனையை எதிர்கொண்டு வந்ததாகவும், ஆனால் அண்மைக்காலமாக ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் வெள்ளம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.







