சபாக் பெர்னாம், நவ 8 : இவ்வாண்டு, புஞ்சாக் ஆலாம் (Puncak Alam) பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் திடீர் வெள்ளத்திற்கு, புக்கிட் செராகா (Bukit Cherakah) வனக்காப்பகப் பகுதியைச் சுற்றியுள்ள காடு அழிப்பு நடவடிக்கைகளே காரணமெனக் கூறப்படுவது தொடர்பில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தீர விசாரணை நடத்தும்.
அப்பகுதியில் காடழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து தங்களுக்கு இதுவரை எந்தவோர் அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என்று மாநில பொது சுகாதார சுற்றுச்சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.
தற்போது தன்னிடம் உள்ள தகவல்களின்படி, புக்கிட் செராகா வனக்காப்பகம் 1,298.86 ஹெக்டர் பரப்பளவிலும், அதன் கூடுதல் வனக்காப்பகப் பகுதி 982.80 ஹெக்டர் பரப்பளவிலும் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்விரு பகுதிகளும் சிலாங்கூர் வனத்துறை (JPNS) மூலம் பாதுகாக்கப்பட்ட காடுகளாகவும், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விடங்களாகவும் நிர்வகிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
மேலும், இப்பகுதியின் ஒரு பகுதி ஷா ஆலாம் தேசிய தாவரவியல் பூங்காவைக் கொண்டுள்ளதுடன், நீர் தடாகப் பகுதியாகவும் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் விளக்கினார்.
இன்று சபாக் பெர்னாம், சிம்பாங் லீமா, பாரிட் 14 இல் நடைபெற்ற '2026 பான் கால்வாய் விழா'வின் (Karnival Ban Canal 2026) நிறைவு விழாவிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த போது ஜமாலியா இதனைத் தெரிவித்தார்.
பொதுமக்கள் முன் வைக்கும் புகார்கள் குறித்து நிச்சயமாகத் தகுந்த விசாரணை நடத்தப்படும் என்றும், இது குறித்து மேற் நடவடிக்கைக்காக சிலாங்கூர் வனத்துறைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் ஜமாலியா வலியுறுத்தினார்.
முன்னதாக, புஞ்சாக் ஆலாம் குடியிருப்பாளர்கள் சங்கக் கூட்டமைப்பு வெளியிட்ட புகாரில், புக்கிட் செராகா வனக்காப்பக எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் காடழிப்பு நடவடிக்கைகளால், இவ்வாண்டு முழுவதும் தங்கள் பகுதியில் தொடர்ச்சியாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.
குறிப்பாக, 1,200 ஹெக்டருக்கும் அதிகமான வனப்பகுதி காப்பகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதே (Degazetted) இதற்கு முக்கியக் காரணம் என்று அவர்கள் கூறினர்.
இந்த நீக்க நடவடிக்கை கடந்த 2000-ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில செயற்குழுவின் (MMKN) முடிவின்படி எடுக்கப்பட்டு, பின்னர் 2022-இல் மீண்டும் அரசிதழில் (Gazetted) இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.








