நெடுஞ்சாலையில் போலீஸ் வேன் விபத்து; அதிகாரி ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

17 நவம்பர் 2026, 9:55 AM
நெடுஞ்சாலையில் போலீஸ் வேன் விபத்து; அதிகாரி ஒருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

ஈப்போ, நவ.17: பேராக், தாப்பா அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய KM352-இல், அரசு மலேசிய காவல்துறைக்குச் (PDRM) சொந்தமான வேன் கட்டுப்பாட்டை இழந்து இரும்புத் தடுப்பில் மோதியதில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

இன்று காலை சுமார் 11.35 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில், Maxus ரக வேன் பேராக் மாநில காவல்துறை தலைமையகத்திலிருந்து மலாக்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகப் பேராக் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் அலவி சைனல் அபிடின் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், வேனின் பின்புற இடதுபக்க டயர் திடீரென வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நெடுஞ்சாலையின் மத்தியில் அமைந்திருந்த இரும்புத் தடுப்பில் மோதியதாகத் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் சில பயணிகள் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். 26 வயதுடைய போலீஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்ததுடன், ஆறு பேர் லேசான காயங்களுக்கு உள்ளாகினர்.

படுகாயமடைந்த நான்கு பேர் சிலிம் ரிவர் மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்த ஆறு பேர் தாப்பா மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தாப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் தாப்பா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 05-401 1222 என்ற எண்ணிலோ அல்லது போக்குவரத்து விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் நஜ்முடின் சுல்கர்னையை 017-325 6140 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.