ஷா ஆலாம், நவ.14: சிலாங்கூர், கிள்ளான் மேற்கு துறைமுகச் சாலையில் நேற்று இரவு இரண்டு லாரிகளுடன் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், 50 வயது ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில், முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் அதன் மீது உரசியதாக நம்பப்படுகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி சாலையின் இடதுபுறத்தில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி அவர் மீது ஏறியதில் இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
கிள்ளான் தெற்கு மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி லிம் ஜிட் ஹூய் இதனைத் தெரிவித்தார்.
பலத்த காயமடைந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் (HTAR) தடயவியல் பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இவ்விபத்து தொடர்பான தகவல் நேற்று இரவு சுமார் 7.36 மணியளவில் காவல்துறைக்குக் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, விபத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் கிள்ளான் தெற்கு மாவட்டக் காவல்துறையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைத் தொடர்புகொள்ளலாம்.
விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் முகமட் முஸ்தாகின் நஜ்ரியை 012-582 6983 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தகவல்களை வழங்கலாம்.







