கோலாலம்பூர், நவ.17: நாடு முழுவதும் பாழடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களைச் சீரமைக்க 2023 முதல் 2027ஆம் ஆண்டு வரை RM13 பில்லியனுக்கும் அதிகமான நிதியை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.
இதனை கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு 2023-ஆம் ஆண்டு RM1.7 பில்லியனும், 2024-ஆம் ஆண்டு RM1.8 பில்லியனும், 2025-ஆம் ஆண்டு RM4.1 பில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், 2026-ஆம் ஆண்டுக்கு RM1.3 பில்லியனும், 2027-ஆம் ஆண்டுக்கு RM4.1 பில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிகளின் கட்டடங்களைப் புதுப்பித்து தரம் உயர்த்தும் USNT திட்டத்தின் கீழ், இவ்வாண்டு தீபகற்ப மலேசியப் பள்ளிகளுக்கு RM100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கட்டடங்களின் நிலையை மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மாநிலக் கல்வித் துறைகள் மற்றும் பொதுப்பணித் துறை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின்போது, பாழடைந்த பள்ளிக் கட்டடங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அவற்றைப் பாதுகாப்பான முறையில் சீரமைப்பது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.
மேலும், சபாவில் உள்ள SMK Tamparuli மற்றும் SMK Tenghilan ஆகிய பள்ளிகளில் ஆபத்தான கட்டடங்கள் ஏற்கெனவே காலி செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வோங் கா வோ தெரிவித்தார்.
நீண்டகாலத் தீர்வாக, இரு பள்ளிகளிலும் கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் SIT பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் முடிவுகளின் அடிப்படையில், 2028-ஆம் ஆண்டு RMK13 திட்டத்தின் கீழ் மறுகட்டமைப்புக்கான நிதி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும் என துணை அமைச்சர் தெரிவித்தார்.







