ஷா ஆலாம், ஜூலை 2: மலேசியாவில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளிக் கட்டடங்கள், கட்டமைப்பு ரீதியாகப் பாதுகாப்பற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு மாற்றாகப் புதிய கட்டடங்களை அமைக்கும் திட்டங்களைக் கல்வி அமைச்சு (MOE) கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் 1,061 பள்ளிகள் 'அளவீடு 7' (Scale 7) என்ற மிக மோசமான நிலையில் உள்ள கட்டடங்களைக் கொண்டிருப்பதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, மாநிலக் கல்வித் துறைகளின் வாயிலாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றுப் புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கான அவசியம் மற்றும் சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
தகுதிகளைப் பூர்த்தி செய்யும் இத்தகைய பள்ளி மாற்றுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், ஐந்து ஆண்டுகால மலேசிய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பரிசீலனை செய்யப்படுவதற்காக மத்திய முகமையிடம் கட்டம் கட்டமாகச் சமர்ப்பிக்கப்படும்.







