கோலாலம்பூர், நவ.3: நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் தொடர்பான தேவைகளை முன்வைக்க, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG) விண்ணப்பிப்பதற்கான சிறப்பு வழிமுறையை கல்வி அமைச்சு ஏற்படுத்தியுள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புத் தேவைகள் தொடர்பான விண்ணப்பங்கள் இம்மாதம் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.
இதற்காக வழங்கப்பட்டுள்ள இணைய இணைப்பு மற்றும் QR குறியீடு வாயிலாக சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் நேரடியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சு தனது அதிகாரத்துவ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டிலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
முந்தைய ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக ஒரு பில்லியன் ரிங்கிட் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் சேதமடைந்த வசதிகளைச் சீரமைப்பதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வொரு விண்ணப்பமும் அந்தந்தப் பள்ளியின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பாகக் கடுமையாகச் சேதமடைந்த கட்டமைப்புகள் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிச் சமூகத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.







