ஷா ஆலாம், நவ.17: சிலாங்கூரின் ஆறு மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, செப்பாங், கோலா லங்காட், கிள்ளான், பெட்டாலிங், கோலா சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்னாம் ஆகிய மாவட்டங்கள் இந்த எச்சரிக்கைக்கு உட்பட்டுள்ளன.
சிலாங்கூரைத் தவிர புத்ராஜெயா, கெடா, பினாங்கு, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பொதுமக்கள் திடீர் வானிலை மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும்போது திறந்தவெளிப் பகுதிகளைத் தவிர்த்து, வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





