கோலாலம்பூர், நவ 8 : மலேசியாவின் நான்கு மாநிலங்களில் வரும் புதன்கிழமை வரை, தொடர் மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று மாலை விடுத்துள்ள புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.
இந்தத் தொடர் மழை எச்சரிக்கை திரெங்கானு மாநிலம் முழுவதற்கும், கிளாந்தான், பகாங் மற்றும் சபா ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கிளாந்தான் மாநிலத்தில் தானா மேரா, பாசிர் மாஸ், தும்பாட், கோத்தா பாரு, மாச்சாங், பாச்சோக், பாசிர் பூத்தே, கோலா கிராய் மற்றும் ஜெலி ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கை வரம்பிற்குள் வருகின்றன.
பகாங் மாநிலத்தில் குவாந்தான், பெக்கான் மற்றும் ரொம்பின் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளதுடன், திரெங்கானு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை முழுமையாகப் பொருந்தும்.
கிழக்கு மலேசியாவின் சபாவில் நாளை முதல் புதன்கிழமை வரை தொடர் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடாட் மாவட்டம் மற்றும் சண்டாக்கான் பிரிவின் கீழ் வரும் பைத்தான், தெலுபிட், லாபுக், சுங்குட், சண்டாக்கான் மற்றும் கினபாத்தாங்கான் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பருவமழைக்காலம் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தற்போதைய வானிலை நிலவரங்கள் மற்றும் மாற்றங்களை மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது 'myCuaca' என்ற கைபேசி செயலி வாயிலாகத் தொடர்ந்து உடனுக்குடன் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் சந்தேகங்கள் அல்லது அவசரக் கேள்விகள் இருந்தால், வானிலை ஆய்வு மையத்தின் 1-300-22-1638 என்ற சிறப்பு அவசர உதவி எண்ணை அழைத்துத் தொடர்பு கொள்ளலாம்.






