ஷா ஆலாம், நவ.14: சிலாங்கூரின் 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது கிள்ளான், கோலா லங்காட், சிப்பாங், பெட்டாலிங், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய 7 மாவட்டங்களில் இந்த வானிலை நிலவக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோலாலம்பூர், புத்ராஜெயா, பினாங்கு, கெடா, பேராக், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்தது.
இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை குறுகிய கால முன்னறிவிப்பாகும். ஒவ்வொரு முறையும் வெளியிடப்படும் இத்தகைய எச்சரிக்கை அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வானிலை ஆய்வுத் துறை விளக்கமளித்துள்ளது.
எனவே, சீரற்ற வானிலையின்போது பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வானிலை தொடர்பான அண்மைய தகவல்களைப் பெற்றுக்கொள்ள பொதுமக்கள் www.met.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதுடன், வானிலை ஆய்வுத் துறையின் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் myCuaca செயலியையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.






