புத்ராஜெயா, நவ.4: கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சட்டவிரோத சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, காவல்துறையினருக்குச் சுமார் RM1 மில்லியன் லஞ்சம் வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் டத்தோ பட்டம் கொண்ட ஒருவர் உட்பட மூவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் டத்தோ பட்டம் கொண்ட நிறுவன உரிமையாளர், டியூசன் ஆசிரியையான ஒரு பெண் மற்றும் சந்தைப்படுத்தல் நிர்வாகியாகப் பணியாற்றும் மற்றொரு பெண் ஆகியோர் அடங்குவர்.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட இவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) மாலை 4 மணியளவில் புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டவிரோத சிகரெட் கடத்தல் நடவடிக்கைகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பைப் பெறுவதற்கும், அமலாக்க நடவடிக்கைகளிலிருந்து தப்பிப்பதற்கும் சந்தேக நபர்கள் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், இவர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் கீழ்நிலைப் பணியாளர்களுக்குப் பணத்தை வழங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
MACC-யின் புலனாய்வுப் பிரிவு, காவல்துறையுடன் இணைந்து சந்தேக நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது.
இந்நடவடிக்கையின்போது, சுமார் RM600,000 மதிப்புள்ள 4 சொகுசு வாகனங்கள், 4 கைப்பேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி ஆகியவற்றை MACC பறிமுதல் செய்துள்ளது.
அத்துடன், சுமார் RM1.5 மில்லியன் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளைக் கொண்ட 20 தனிநபர் வங்கிக் கணக்குகள் மற்றும் ஒன்பது நிறுவன வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், MACC-யின் தடுப்புக் காவல் கோரிக்கையை புத்ராஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்களும் நவம்பர் 2ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
MACC தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தியதுடன், இவ்வழக்கு 2009ஆம் ஆண்டு MACC சட்டத்தின் 17(b) பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.







